#BIG NEWS : குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரையும் விட்டுவிட கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு CM விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களில் காவல் ஆணையருடன் 2 முறை நேரடியாக ஆலோசனை நடத்திய அவர், வழக்கில் தீவிர விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஏற்கனவே இவ்வழக்கில் வீரமணிக்கு உதவியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 6.10.2025 அன்று விபசார தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகாரை தெரிவித்தார். அதில், "அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னுடைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் 'பென்டிரைவ்' ஒன்றை கொடுத்தார். அதில் பிரபல தொழில் அதிபரான 'ஜெம்ஸ் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி (வயது 84) சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட 'வீடியோ' காட்சிகள் இருப்பதாக கூறிச் சென்றார்” என்ற தகவலை தெரிவித்தார்.
அந்த 'பென்டிரைவ்'வில் இருந்த வீடியோ காட்சியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் வீரமணி சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் 7.10.2025 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபர் வீரமணி சாந்தி என்ற பெண்ணுக்கு தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்கனும் பல சிறுமிகளை தொழில் அதிபர் வீரமணிக்கு விருந்தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
இதில் இந்த வழக்கு தொடர்பான 'வீடியோ' ஆதாரங்கள், சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல சிறுமிகளை சீரழித்த தொழில் அதிபர் வீரமணியை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்புப்பிரிவு போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். சிறுமிகளை சப்ளை செய்து வந்த சாந்தி, அவரது கண வர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு போக்சோ வழக்கு என்பதால் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் தனி கவனம் செலுத்தி புகாரில் அளிக்கப்பட்ட பென்டிரைவில் உள்ள சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை தொடங்கினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதைதொடர்ந்து தொழிலதிபர் வீரமணியை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். வீரமணிக்கு 80 வயதுக்கு மேல் ஆவதால் சிறையில் உள்ள அவரை வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்த முடியாததால், நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையிலேயே கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை துணை கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் மட்டும் வீரமணியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஆசிரமங்கள் தொடங்கி ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி செய்து இச்சைக்கு பயன்படுத்தியதும், 100 சிறுமிகள், இளம்பெண்களை ‘ஜெம் கிரானைட் வீரமணி’ சீரழித்ததும், உல்லாசத்துக்காக போயஸ் கார்டனில் ரூ.2 லட்சத்துக்கு பங்களா வீட்டை வாடகை எடுத்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் தீவிர விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என்றும் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை அழைத்து முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவையடுத்து கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விபசார தடுப்பு பிரிவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.