#BIG NEWS : நாளை மற்றும் நாளை மறுநாள் ஐடிபிஐ வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்!
ஐடிபிஐ (IDBI) வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளைக் கனடாவைச் சேர்ந்த 'ஃபேர்ஃபேக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்' (Fairfax Financial Holdings) நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'M/s 10955230 கனடா இங்க்' அமைப்பிற்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைக் கண்டித்து, அகில இந்திய ஐடிபிஐ அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்துறை வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றைக் கொண்ட 'ஐடிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஐக்கிய பேரவை' (United Forum of IDBI Officers and Employees) வரும் நவம்பர் 2 மற்றும் 3 (திங்கள் மற்றும் செவ்வாய்) ஆகிய தேதிகளில் நாடு தழுவிய இரு நா
ஐக்கிய பேரவையின் அமைப்பாளர் தேவிதாஸ் துல்ஜாபூர்ஃகர், இணை அமைப்பாளர்கள் வித்தல் கோடேஸ்வர ராவ் மற்றும் ரத்னாகர் வான்கடே ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள போராட்ட அறிவிப்பில், கடந்த 2003-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அளிக்கப்பட்ட உறுதிமொழியை மதிக்கும் வகையில் மத்திய அரசு தங்களின் பொதுத்துறை பங்குகளைத் தக்கவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
மத்திய அரசோ அல்லது எல்.ஐ.சி (LIC) நிறுவனமோ பங்குச்சந்தையில் இருந்து மேலும் 6 சதவீத பங்குகளை வாங்கி, வங்கியின் குறைந்தபட்ச அரசு பங்குகளை 51 சதவீதமாகத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய சேவை நிபந்தனைகள், ஊழியர்களின் நல நடவடிக்கைகள், ஓய்வூதியம் மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகளைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்த எழுத்துப்பூர்வமான சட்டப்பூர்வ உறுதிமொழியை வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த மற்றும் வெளிமுகமை (Outsourced) ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐடிபிஐ வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் நிர்வாகமும் மத்திய அரசும் ஊழியர்கள், வைப்புத்தொகையாளர்கள், சிறு கடன் வாங்குபவர்கள் மற்றும் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி, எவ்வித முன் அறிவிப்பும் இன்றி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் (Indefinite Strike) ஈடுபட நேரிடும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) அக்டோபர் 14 அன்று நடத்திய கூட்டத்தில், ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை (மத்திய அரசின் 30.48% மற்றும் எல்.ஐ.சியின் 30.24%) ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்திற்கு ₹52,878 கோடிக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது. இதுவே இந்திய வங்கியியல் வரலாற்றில் மேற்கொள்ளப்படும் மிகப்பரிய அந்நிய நேரடி முதலீடு (FDI) ஆகும்.
வங்கி மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்பியுள்ள நிலையில், பொதுத்துறை என்ற தனித்துவத்தைச் சிதைக்கும் இந்தத் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.