#BIG NEWS : லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய தவெக முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது..!
செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா (எ) வீராசாமி லஞ்சம் பெற்றதாக நேற்று இணையதளத்தில் வீடியோ வெளியானது.சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகை பில்லை விடுவிக்க ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக வீராசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இதனிடையே, சாலை ஒப்பந்ததாரர் நவீன், தாழம்பூர் காவல் நிலையத்தில், வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வீராசாமியை கைது செய்தனர். பின்னர், அவரை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீராசாமியை ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது.
நடந்தது என்ன..?
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் நவீன் (24) என்பவர் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூபாய் 9.80 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போட்டு, சாலை பணிகளை மேற்கொண்டார்.
பணிகள் முடிந்த பின்னரும், அவர் மேற்கொண்ட பணிக்கான ரசீதுகளுக்கு ஒப்புதல் கிடைக்காத காரணத்தால், த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், அக்கட்சியின் மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசமியை நவீன் நாடியுள்ளார்.
தொடர்ந்து, ஜூலை 8-ஆம் தேதி வீராவின் கட்சி அலுவலகத்திற்கு சென்ற நவீன், அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நவீன், ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 9.80 லட்சம் மட்டுமே எனவும், அதிலிருந்து உங்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்தால் எனக்கு பெரிய இழப்பு ஏற்படும் என கூறியதாகவும், ரூ. 70 ஆயிரம் வரை தருவதாக பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஊராட்சி மன்ற தலைவர் வீரா, ரூ. 1 லட்சம் கேட்டு அழுத்தம் கொடுத்த காரணத்தினால், முதல் தவணையாக ரூ. 50 ஆயிரத்தை வீராவின் ஜி-பே கணக்கிற்கு நவீன் அனுப்பியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அதன் பின்னர், ஜூலை 10-ஆம் தேதி மீதமுள்ள ரூ. 50 ஆயிரம் பணத்தை கொடுக்க நவீன் அவரை சந்தித்த போது, “ரூ. 1 லட்சம் போதாது; ரூ.2 லட்சம் தர வேண்டும்” என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இறுதியாக ரூ. 1.30 லட்சம் கொடுக்க நவீன் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஊராட்சி மன்ற கிளர்க்கிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, உடனே ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று வீரா கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, ஜூலை 11-ஆம் தேதி வீராவின் ஜி-பேவிற்கு ரூ. 50,000 பணத்தை நவீன் அனுப்பிதாகவும், மீதமுள்ள ரூ. 30 ஆயிரம் பணத்தை ஊராட்சி மன்ற தலைவரின் அலுவலகத்தில் வைத்து வீராவிடம் நவீன் கொடுத்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் வீரா அலுவலகத்தில் வைத்து ஒப்பந்ததாரர் நவீனிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது லஞ்சம் பெற்ற சர்ச்சையில் சிக்கியுள்ள த.வெ.க ஊராட்சி மன்ற தலைவர் வீரா மீது, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறைகேடு செய்ததாக 1, 2, 5 ஆகிய வார்டு உறுப்பினார்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில் பேரின், அவரின் காசோலை அதிகாரம் (Cheque power) ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு மே மாதம் 6 வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் வீராவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர், வீரா சென்னை நீதிமன்றத்தை நாடி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் தலைவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.