#BIG NEWS: ஜெம் வீரமணி வழக்கின் குற்றப்பத்திரிகையில் முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பெயர்..!!
'ஜெம் கிரானைட்ஸ்' தொழிலதிபரான ஜெம் வீரமணி 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு (CCB) குற்ற எண் 174/2025-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளை விசாரிப்பதற்காக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் (DGP/HoPF) அவர்களால் 24.09.2026 அன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team) அமைக்கப்பட்டது.
சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தாயார் அளித்த புகார்களின் அடிப்படையில், மொத்தம் ஒன்பது பாதிக்கப்பட்டவர்களைச் சார்ந்து புதிதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த 7 வழக்குகளில், AVS-1 பிரிவு குற்ற எண்.11/2026-ல் 11.11.2026 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 27.09.2026 அன்று பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை, முதல் எதிரியான வீரமணி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். மேலும், இக்குற்றம் குறித்து தெரிந்திருந்தும், இரண்டாவது எதிரியான பார்த்திபன் மற்றும் மூன்றாவது எதிரியான பாபு ஆகியோர், பாதிக்கப்பட்ட சிறுமியை வாகனத்தில் அழைத்துச் சென்று, வீரமணியின் இருப்பிடத்தில் இறக்கிவிட்டுள்ளனர். அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட முதல் எதிரி வீரமணி மற்றும் அவரது ஓட்டுநர்களான இரண்டாவது எதிரி பார்த்திபன் மற்றும் மூன்றாவது எதிரி பாபு ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் (IPC) 366, 506(2), போக்சோ சட்டம் (POCSO Act) பிரிவுகள் 5(1)(m)(i) உடன் இணைந்த பிரிவுகள் 6 மற்றும் 17, மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் (SC/ST Act) பிரிவுகள் 3(1)(w)(1), 3(2)(v) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்கில், வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 46 நாட்களுக்குள், சுமார் 720 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை, 40 சாட்சிகளுடன் தயாரிக்கப்பட்டு, 11.11.2026 அன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை முறையாக கையாளவில்லை எனக் குறிப்பிட்டு சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ், டி.எஸ்.பி யாஸ்மின் உள்ளிட்ட 7 காவல் அதிகாரிகள் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ், சென்னையில் கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன், உதவி ஆணையர் யாஸ்மின் உள்ளிட்ட 7 காவல் அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.