#BIG NEWS : பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்..!!
புகழ்பெற்ற எழுத்தாளரும் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் திங்கட்கிழமை (அக்டோபர் 5) காலமானார். அவருக்கு வயது 86.
வீட்டில் எழுதிக்கொண்டிருந்தபோது அவர் அமைதியான முறையில் உயிரிழந்ததாக ‘ஹார்ப்பர்காலின்ஸ்’ பதிப்பகம் அறிவித்துள்ளது.
ஐம்பது ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் அவரின் நாவல்கள் 300 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டன. 1976ல் முதன்முதலில் வெளிவந்த அவரின் “நாட் அ பெனி மோர், நாட் அ பெனி லெஸ்”, 1979ல் வெளியீடு கண்ட “கேன் & ஏபெல்” போன்ற பல விறுவிறுப்பான நாவல்களுக்காக உலகளவில் அறியப்பட்டவர் ஆர்ச்சர்.
அவரது கதைமாந்தர்களைப் போலவே அவரது வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்தது. 1969ல் 29வது வயதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான ஆர்ச்சர், நிதி இழப்பு, ஊடகச் சர்ச்சைகளால் பதவி விலகினார். 1985ல் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டபோதிலும் 1987ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் பொய்ச் சாட்சியம் அளித்ததற்காக 2001ல் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
2014ல் ‘புரோஸ்டேட்’ சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆர்ச்சரின் இறுதி நாவலான ‘ஆடம் அண்ட் ஈவ்’ செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) வெளியீடு காண இருந்தது. 2024ல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற மேலவையிலிருந்து அவர் ஓய்வுபெற்றார். காலஞ்சென்ற ஆர்ச்சருக்கு இறுதிவரையில் உறுதுணையாக இருந்தவர் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அறிவியலாளருமான அவரது மனைவி மேரி.