#BIG NEWS : பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு..!!
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 69-ன் கீழ் முத்துக்குமரன் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான வஹிதா என்ற இளம்பெண், முத்துக்குமரனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவர் தன்னுடன் நெருங்கிப் பழகியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பாக அந்தப் பெண் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், தான் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த அந்த இளம்பெண், முத்துக்குமரன் மீது உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தார்.
தன்னுடன் சேர்ந்து வாழ சம்மதித்து முத்துக்குமரன் தாலி கட்ட வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த முத்துக்குமரன், நாங்கள் நட்பாக மட்டுமே பழகினோம் என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை அவர் வெளியிடுவதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எதிர் புகார் அளித்திருந்தார்.
முத்துக்குமரன் அளித்த புகாரை ஆய்வு செய்த விருகம்பாக்கம் போலீசார், அதில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுமாறும் அவருக்குக் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்தச் சூழலில், இளம்பெண் அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதைத் தொடர்ந்து, தற்போது முத்துக்குமரன் மீது BNS பிரிவு 69-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.