☰
×

#BIG NEWS : 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போயிங் நிறுவனம்.!!

 

உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் விதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கொத்து, கொத்ததாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' நிறுவனமும் ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விமானங்கள் மட்டும் இன்றி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வரும் போயிங் நிறுவனம், சமீப ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

விநியோகச் சங்கிலி மற்றும் அசெம்பிளி லைன் (Assembly line) சவால்கள் காரணமாக, தனது உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள உள்ள போயிங் நிறுவனம், அதன் வணிக விமானப் பிரிவில் (BCA) சுமார் 5 சதவீத பணியாளர்களைப் (சுமார் 2,500 பேர்) பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து போயிங் கமர்ஷியல் ஏர்பிரேன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெபானி போப் (Stephanie Pope) ஊழியர்களுக்கு அனுப்பிய உள்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவால் 737 மேக்ஸ் (737 MAX) மற்றும் 787 ட்ரீம்லைனர் (787 Dreamliner) அசெம்பிளி லைன்கள் பாதிக்கப்படவுள்ளன.

737 மேக்ஸ்: இந்த விமானத்தின் மாதத்திற்கு 47 விமானங்கள் என்ற உற்பத்தி இலக்கு 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதி அல்லது இறுதிப்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரென்டன் (Renton) பகுதியில் உள்ள விங் அசெம்பிளி செயல்பாடுகளில் ஏற்படும் நெரிசல்கள் தவிர்க்கப்படும்.

787 ட்ரீம்லைனர்: வைட்பாடி (Widebody) வகையைச் சேர்ந்த 787 விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு வேகம் குறைக்கப்பட்டுள்ளது. சப்ளையர்கள் தொழிற்சாலை நிலைத்தன்மையை அடைய இந்த மெதுவான காலக்கோடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6,300 விமானங்களுக்கும் அதிகமான ஆர்டர் புக்:
இந்தச் சவால்கள் மற்றும் உற்பத்தித் தடையால் குறுகிய கால மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டாலும், போயிங் நிறுவனம் தற்போது வரை 6,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் அடங்கிய மாபெரும் ஆர்டர் பேக்லாக்கைக் (Backlog) கொண்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 610 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும். ஆயினும், உற்பத்தித் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டு இழப்புகள் காரணமாக போயிங் நிறுவனம் தனது பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.