#BIG NEWS :அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு..!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அம்பேத்கர் சிலையை அமைத்துள்ளனர்.. பொதுவாக நாற்காலியில் அமர்ந்திருந்தபடியோ அல்லது நின்றபடியோ கையில் சட்டப்புத்தகத்தை வைத்திருப்பதுபோன்றுதான் அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஒதியத்தூர் இளைஞர்கள் அமைத்திருந்த சிலையில் அம்பேத்கர் கால் மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார்.
அந்த சிலைக்கு அருகிலேயே ராஜீவ் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளும் இருந்த நிலையில் கால்மேல் கால்போட்டபடி அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டதற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுஒருபுறமிருக்க, ராஜீவ் காந்தி மற்றும் காமராஜர் சிலைகள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டிருப்பதாகவும், அம்பேத்கர் சிலை உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும்
அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக பிரச்சினையாக உருவெடுக்க பட்டியலின இளைஞர்கள் வழி வகுப்பதாக கூறி மாற்று சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், ராஜீவ் காந்தி மற்றும் காமராஜர் சிலைகள் போன்றுதானே அம்பேத்கர் சிலையும், அதனால் அந்த சிலை இருப்பதில் என்ன பிரச்சினை? என பட்டியலின இளைஞர்களும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறினர். இந்த பிரச்சினை பூதாகரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சிலை வைத்த பத்தே நாட்களுக்குள் தகரத்தால் மூடினர் அதிகாரிகள் அதில் இருந்தே, அம்பேத்கர் சிலையை மீண்டும் திறக்கக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கைகளை குவித்தனர் பட்டியலின இளைஞர்கள்.
தற்போது தவெக அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அம்பேத்கர் சிலையை மீண்டும் திறக்கக்கோரி அமைச்சர் வன்னி அரசுவை நேரில் சந்தித்து ஒரு லெட்டரை வாங்கி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர் சிலை திறப்பு ஒருங்கிணைப்புக்குழுவினர். அதனை வாங்கிய ஆட்சியரும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்கான சூழல் கைகூடியதும், சிலையை திறப்பது குறித்து முடிவெடுப்பதாக கூறி உள்ளார்.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையைத் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அம்பேத்கரை ஒரு சாதியத் தலைவராகச் சுருக்குவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், சிலைகளைத் திறக்க முடியாத நிலை தமிழகம் முழுவதும் உள்ளதாகக் கவலை தெரிவித்தார்.