#BIG NEWS : முரசு புயலில் சிக்கி காசிமேடு மீனவர்கள் 4 பேர் பலி..!!
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த அக்., 29ம் தேதி, செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றது. படகில், காசிமேட்டைச் சேர்ந்த ஓட்டுநர் சூர்யா, 49 தலைமையில், குப்பன், 48, மோகன், 47, முருகன், 48, குப்புசாமி, 58, அரவிந்த், 40, நாராயணன், 57, திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ், 52, விஜயகாந்த், 44 உள்ளிட்ட ஒன்பது பேர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
ஆந்திர மாநிலம் நிசாம் பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 'முரசு' புயல் எச்சரிக்கை கிடைத்துள்ளது. இதையடுத்து, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகள் ஆந்திராவின் ராமாயபட்டினம் துறைமுகத்திலும், ஒரு படகு நிசாம்பட்டினம் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டன. தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் பாதுகாப்பாக இருப்பதை, கடந்த, 2ம் தேதி தமிழக அதிகாரிகள் உறுதி செய்ததாக, பிரகாசம் கலெக்டர் ராஜா பாபு தெரிவித்தார்.
மறுநாளான, 3ம் தேதி நிசாம்பட்டினம் துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகில் இருந்த ஒன்பது மீனவர்களும், அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ராமாயபட்டினம் நோக்கிப் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, புயலில் சிக்கியதில், படகின் இன்ஜின் பழுதாகியுள்ளது.
இதையடுத்து, கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடங்கின. அதன்பின், ஒன்பது மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மீனவர்கள் மாயமாகி மூன்று நாட்களாகியும், எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கூறி, உறவினர்கள், 200க்கும் மேற்பட்டோர், காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து கண்ணீர் மல்க, சூரியநாராயணா சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், ஆந்திராவில் ஓங்கோல் கடற்பகுதியில், ஐந்து பேர் உடல் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்கள் அடங்கிய குழுவினருடன், ஆர்.கே.நகர் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், நிதியமைச்சருமான மரியவில்சனும் ஆந்திராவிற்கு விரைந்துள்ளார்.
அமைச்சர் மரியவில்சல் கூறியதாவது: எந்த ஒரு பாதுகாப்பு அம்சமும் இன்றி, புயலில் படகு ஆழ்கடலுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். இதுதொடர்பாக படகு உரிமையாளரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கடலில் மாயமான மீனவர்களின் உறவினர்களுடன் ஆந்திராவிற்கு செல்கிறேன். அங்கேயே முகாமிட்டு, உடல்களை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தலா ஏழு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், இரண்டு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட உள்ளது. மீனவர்களின் உடல்களை, அரசு செலவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.