☰
×

#BIG NEWS : 18 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..! பானி பூரி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

 

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள கேஸ்ராஹா (Khesraha) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலாநாகோர் பெடாரி (Kalanakhor Pedari) கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் தீபாவளிக் கொண்டாட்டங்களின் போது பெரும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் பானி பூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென கடுமையான உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, குழந்தைகள் உட்பட 30 பேருக்கும் அதிகமானோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அவசரப் பிரிவு மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், "இதுவரை 30 முதல் 33 நோயாளிகள் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 குழந்தைகள் PICU எனப்படும் தீவிர குழந்தைகள் சிகிச்சைப் பிரிவிலும், 15 பேர் 15 வயதுக்கு மேற்பட்டோரும் ஆவர். ஆரம்பத்தில் 2 முதல் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது, தற்போது அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளனர்" என்று தெரிவித்தார். மேலும், பேருந்துகள் மூலம் கூடுதல் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற உணவு நச்சுத்தன்மைச் சம்பவம் பதிவாவது இது முதல் முறறல்ல. கடந்த மாதம் அமேதி மாவட்டத்திலும் இதேபோன்று ஒரு சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள கோத்வா கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் 'கஸ்தா' (Khasta) உணவுப் பண்டத்தைச் சாப்பிட்ட 102 பேர் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் குழந்தைகள் உட்பட 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்ததும் சுகாதாரத்துறைத் துறையினர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) ஆகியோர் கிராமத்திற்கு நேரில் விரைந்து சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தெருக்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.