×

#BIG BREAKING : மூண்டது போர்..! ஈரான் தலைநகரைத் தாக்கிய இஸ்ரேல் ராணுவம்: மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்..!

 

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் தொடங்கி உள்ளது.

ஈரான் மீது ஒரு தற்காப்புத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேல் இந்த அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.

தெஹ்ரானின் மையப்பகுதியான ஜம்ஹூரி பகுதி மற்றும் பல்கலைக்கழக வீதி ஆகிய இடங்களில் இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியுள்ளன. மேலும், தெஹ்ரானின் முக்கியப் பகுதியான பாஸ்டர் வீதிக்கு அருகிலிருந்து கரும்புகை வெளியேறுவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் நிலப்பரப்பில் இஸ்ரேல் இத்தகைய நேரடித் தாக்குதலை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவக் கட்டமைப்பை நிலைகுலையச் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்கொலிகளை ஒலிக்கச் செய்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், சாத்தியமான ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.