#BIG BREAKING: லோன் வாங்கியோருக்கு அதிர்ச்சி..!!ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. 2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, இந்த வட்டி விகிதத்தை மாற்றி அமைப் பது பற்றி ஆலோசனை நடத்துகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமை அன்று தனது இருமாத பணவியல் கொள்கை முடிவுகளை அறிவித்தது. இதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25%) உயர்த்தப்பட்டு, 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக அளவில் பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பணவியல் கொள்கைக் குழுவின் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த வட்டி விகித உயர்வை ஒருமனதாக அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதன்முறையாக ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், 2023 பிப்ரவரியில் வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டு 6.50% ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு 2023-24 காலகட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த வட்டி விகிதங்கள், 2025-ஆம் ஆண்டில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தன.
தற்போது நிலவும் பொருளாதாரச் சூழல் காரணமாக மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடன் வாங்கியவர்களுக்கான மாதத் தவணை (EMI) மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.