#BIG BREAKING : தமிழக அரசியலில் பரபரப்பு : தவெகவில் இணைய ஓபிஎஸ் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா..?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அண்ணா தி.மு.க. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்சினை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. விலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கி, ஓ.பன்னீர்செல்வம் அண்ணா தி.மு.க.வில் மீண்டும் இணைய தயார் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டாலும், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அண்ணா தி.மு.க.வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.வுக்கு சென்று விட்டனர். கு.ப.கிருஷ்ணன்,ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வுக்கு சென்றுவிட்டனர். எம்.பி. தர்மர் எடப்பாடியிடம் சென்றுவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி துவங்கிவி்ட்டார்.
இந்தச் சூழ்நிலையில் அடுத்தக்கட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரை மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி தி.மு.க. துண்டு அணிவித்து வரவேற்றார்.தமிழ்நாட்டின் 3 முறை முதலமைச்சராக இருந்த ஒருவர் வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.
தி.மு.க.வில் கடந்த பிப்ரவரி மாதமே ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில், இதுவரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தேர்தலில் தி.மு.க.வும் தோல்வி அடைந்தால், அடுத்து என்ன செய்வது என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறப்பு என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.