#BIG BREAKING : குழந்தைகளை மட்டும் குறிவைக்கும் புதிய ஒமிக்ரான் வகை வைரஸ்! தப்பிப்பது எப்படி?
‘BA.3.2.2’ என்ற புதிய ஓமிக்ரான் வகை வைரஸ், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை மிக எளிதாகத் தாக்கும் பேராபத்தைக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தரும் புதிய மருத்துவ ஆய்வு எச்சரித்துள்ளது.
பயோஆர்கைவ் (bioRxiv) மருத்துவ இதழில் வெளியாகியுள்ள புதிய ஆய்வின்படி, உருமாறிய புதிய வைரஸ் பெரியவர்களை விடக் குழந்தைகளை ஏன் அதிகம் தாக்குகிறது என்பதற்கான அறிவியல் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. பெருந்தொற்றின் ஆரம்பக்கால ஆதி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகாத அல்லது அதற்கான முந்தைய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாத சிறு குழந்தைகளுக்கு, இந்த புதிய வகை வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்புத் திறன் (Immune imprinting) உடம்பில் சுத்தமாக இல்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்குக் காரணம், குழந்தைகளின் உடலில் இயற்கையாக உருவாகும் 'வகுப்பு 1 மற்றும் 4' ரத்த எதிர்ப்பு அணுக்களை (Antibodies) இந்த புதிய வைரஸ் முற்றிலும் ஏமாற்றிவிட்டு உடலுக்குள் ஊடுருவுகிறது. அதே நேரத்தில், ஏற்கனவே பழைய வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அல்லது எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசிகளை முறையாகப் போட்டுக்கொண்ட பெரியவர்களின் உடலில் இருக்கும் 'வகுப்பு 1' எதிர்ப்பு அணுக்கள், இந்த புதிய வைரஸை மிக எளிதாக வீழ்த்திவிடுகின்றன.
ஆனால், இதில் இருக்கும் ஆகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த வைரஸ் தொடர்ந்து குழந்தைகளிடையே மட்டும் பரவிக்கொண்டே இருந்தால், அது மேலும் ஆபத்தான முறையில் உருமாற்றமடையக் கூடும். அப்படி உருமாறினால், பெரியவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடைக்கும் புதிய பேராற்றலை அந்த வைரஸ் பெற்றுவிடும் என்றும், அது மீண்டும் உலகம் முழுவதும் தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பழைய வைரஸ் பாதிப்பால் பெரியவர்களுக்குக் கிடைத்துள்ள நோய் எதிர்ப்புத் திறன், இந்த முற்றிலும் மாறுபட்ட புதிய வைரஸுக்கு எதிராகவும் விசித்திரமான முறையில் வேலை செய்வதை இந்த ஆய்வு விளக்குகிறது. மேலும், இந்த முக்கிய கண்டுபிடிப்பானது வருங்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் தடுப்பூசித் திட்டங்களை உருவாக்குவதற்கு மிக முக்கிய வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.