×

#BIG BREAKING : திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐ.யூ.எம்.எல்..!!

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க. ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 480 பேர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அந்த கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருவதோடு, இன்றைய அரசியல் சூழலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என்றும், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தீர்மானம் 1 :

இரங்கல் தீர்மானம்

தீர்மானம் : 2

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு துணை நின்ற கூட்டணி கட்சியினருக்கு நன்றி :

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் ஏ.எம்.ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா ஆகிய வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர் பெருமக்களுக்கும், இருவரின் வெற்றிக்காக ஒத்துழைப்பு அளித்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருக்கும் இதயம் நிறைந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் இந்த பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 3

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள் :

2026-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்களின் ஆமோக ஆதரவோடு 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்த கூட்டம் இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 4

வரலாற்று சிறப்புக்குரிய தீர்க்கமான முடிவிற்கு அங்கீகாரம்-இ.யூ.முஸ்லிம் லீக் தலைமைக்கு பாராட்டு

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக வந்தபோதும், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை பெறாத நிலையில், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் உருவானது. இதன் காரணமாக பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் 05.05.2026 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைவதற்கு இ.யூ.முஸ்லிம் லீகின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். அத்துடன் த.வெ.க.வின் முன்னணி நிர்வாகிகள் இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கேட்டு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய புரவலர்கள், இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள், சர்வ சமய தலைவர்கள் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களை வென்றுள்ள த.வெ.க.வின் ஆட்சி அமைவதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 09.05.2026 அன்று சென்னையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீகின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மேதகு ஆளுநர் அவர்களிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் த.வெ.க. தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பு ஏற்க அழைப்பு விடுத்தார். அதன்படி, 10.05.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசில், இ.யூ.முஸ்லிம் லீக் இடம்பெற வேண்டும் என த.வெ.க. சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ., உள்ளிட்டோரும் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கும் திரு.ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் இ.யூ.முஸ்லிம் லீக் அங்கம் வகிக்க வேண்டும் என தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர்.

அதன்படி, 21.05.2026 அன்று சென்னையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தில் விரிவாக கருத்து பரிமாற்றம் நடைபெற்று, திரு.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசில் இ.யூ.முஸ்லிம் லீக் அங்கம் வகிப்பது என்றும், ஓர் அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறியதன் அடிப்படையில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஷாஜஹான் அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த தெளிவான அரசியல் முடிவு எடுத்தற்காக இ.யூ.முஸ்லிம் லீக் தலைமைக்கு சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், பொதுநலனில் அக்கறை கொண்ட சமுதாய புரவலர்களும், சர்வ கட்சியினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புக்குரிய தீர்க்கமான அரசியல் முடிவை எடுக்க வழிகாட்டிய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் இந்த பொதுக்குழு அங்கீகாரத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

தீர்மானம் : 5

கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களுக்கு பாராட்டு :

அண்மையில் நடந்து முடிந்த கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், 22 தொகுதிகளில் மாபெரும் வெற்றிபெற்று வரலாற்று சாதனை புரிந்தனர். மாண்புமிகு வி.டி.சதீசன் அவர்கள் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் புதிய அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி, கே.எம்.ஷாஜி, என்.சம்சுதீன், பி.கே.பஷீர் வி.இ.அப்துல் கபூர் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். கேரள அரசில் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட 5 பேருக்கும், இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

இத்தகைய வரலாற்று சாதனைக்கு வழிகாட்டியாக இருந்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள், கேரள மாநில, மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் இந்த பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 6

இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து :

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் அங்கீகரிக்கப்பட்ட ஏணி சின்னத்தில் களம் கண்டு பாபநாசம் தொகுதியில் ஜனாப் ஏ.எம்.ஷாஜஹான் அவர்களும், வாணியம்பாடி தொகுதியில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா அவர்களும் மகத்தான வெற்றி பெற்றிருக்கின்றனர். எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா, தமிழ்நாடு சட்டமன்ற இ.யூ.முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு அரசில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பாக அமைச்சராக ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் பொறுப்பு ஏற்றதன் மூலம் புதிய வரலாற்று நிகழ்வு நடந்தேறி இருக்கின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே. இவ்விருவரின் பணிகளும் சிறப்பாக அமைந்திட இக்கூட்டம் இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த மாபெரும் வரலாற்று சாதனைக்கு வழிகாட்டிய தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், மாநில, மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியையும் வாழ்த்துகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 7

இயக்கப் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கை :

இ.யூ.முஸ்லிம் லீகின் இயக்கப் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும், நகர, பிரைமரி அளவிலும் தீவிரப்படுத்தும் நோக்கில், மாவட்ட, நகர, பொதுக்குழு கூட்டங்களை ஜுலை மாதத்திற்குள் நடத்திட அனைத்து மாவட்ட நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் தற்போதைய அரசியல் நிலைமையை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அனைத்து ஊர்களிலும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்திட உரிய ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் செய்திட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இக்கூட்டங்களுக்கு பேச்சாளர்களை தலைமை நிலையத்தின் ஏற்பாட்டிலேயே அனுப்பி வைப்பது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் : 8

உள்ளாட்சி தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துதல் :

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வாய்ப்பு உள்ள இடங்களை கண்டறிந்து அதற்காக ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.