பாரத் கேஸ் அலுவலகம் மூடல்- காலி சிலிண்டர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள பாரத் கேஸ் வினியோக அலுவலகம் மூடப்பட்டதால் காலி சிலிண்டர்களுடன் பொதுமக்கள் காத்திருந்தனர்.
ஈரான் -இஸ்ரேல் போர் தொடர்பாக , கச்சா எண்ணெய் இறக்குமதி தடைப்பட்டதால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சேலத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கேஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் அலுவலக போன் அழைப்பை துண்டித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்வதற்காக அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் கேஸ் விநியோக அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புக்கிங் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்கள் கடந்த மூன்று தினங்களாக சீராக வழங்கப்படாததால் கடந்த 10 நாட்களாக புக்கிங் செய்து காத்திருப்பவர்கள் காலி சிலிண்டர் உடன் சிலிண்டர் விநியோக அலுவலகத்தை நாடி வருகின்றனர்.
இந்த நிலையில் வின்சென்ட் , குமாரசாமிப்பட்டி , மரவனேரி , மேட்டுத்தெரு என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று காலை 7 மணி முதலே காலி சிலிண்டர்களுடன் முள்ளுவாடி கேட்டு அருகே உள்ள பாரத் கேஸ் அலுவலகம் முன்பாக திரண்டனர். நண்பகல் 12 மணி ஆகியும் அலுவலகம் திறக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்தனர். மேலும் அங்கு வந்த சிலிண்டர் விநியோக நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலிண்டர் சப்ளை வந்தவுடன் தருவதாக டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .இதனை அடுத்து தாங்கள் கொண்டு வந்த கேஸ் சிலிண்டர்களை வரிசையாக வைத்து , தாங்களாகவே டோக்கன் எழுதி காத்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.