மக்களே உஷார்..! இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (3-ம் தேதி)உருவாகக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, ஜூலை 03, 04 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஜூலை 05, 06 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் (ஜூலை 03) சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று ஜூலை 03- ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலே குறிப்பிடப்பட்டு நாட்களில் அந்த கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 2 செ.மீ. மழையும், வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வனமாதேவி (கடலூர்), மேல் பவானி (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.