பெங்களூரு சின்னசாமி மைதான நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் காதணிகள் மாயம்: பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!
ஜூன் 4 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர். இதில் சிக்கிய திவ்யான்ஷி என்ற சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர் அணிந்திருந்த காதணிகள் காணவில்லை என்று குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காணாமல் போன காதணிகளின் மதிப்பு முக்கியமல்ல என்று திவ்யான்ஷியின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். "என் மகள் அவற்றை மிகவும் பிரியமாக அணிந்திருந்தாள். அது எங்கள் உறவினர் ஒருவர் பரிசாக அளித்தது. அந்த காதணிகள் இருந்தால், என் மகளின் நினைவுகள் எங்களுடன் இருக்கும். பிரேத பரிசோதனை செய்தவர்கள் தான் அவற்றைத் திருடி இருக்க வேண்டும். எனவே அதை மீட்டுத் தர வேண்டும்," என்று அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறுமியின் துயர மரணத்துடன், அவரது தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயிருப்பது, குடும்பத்தினருக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களிடையேயும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.