×

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை - குற்றவாளி சிக்கியது எப்படி?

 

ஆரம்பாக்கத்தில் கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் வைத்து சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் தலைமறைவானார்.

வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சென்னை ராயபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியை மர்ம நபர் வாயை மூடி மாந்தோப்பிற்குள் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியை உறவினர்கள் வெளியிட்ட பிறகே விவகாரம் விஸ்வரூபமானது. போலீசாருக்கு துப்பாக கிடைத்த ஒரே ஒரு சிசிடிவி காட்சி இருந்ததாலும், வேறு எங்கும் சிசிடிவிக்கள் இல்லாததும் விசாரணையில் தொய்வை ஏற்படுத்தியது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரடி மேற்பார்வையில் முதலில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளியை தேடத் தொடங்கினர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தனிப்படைகளின் எண்ணிக்கை 20ஆக உயர்த்தப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு மூலம் தெளிவற்று இருந்த சிசிடிவி காட்சிகளில் இருந்து குற்றவாளியின் தெளிவான புகைப்படம் உருவாக்கப்பட்டது. குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டு தகவல் கொடுப்பவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சன்மானம் அறிவித்தது. தேடப்படும் நபரின் உருவ அமைப்பு சூலூர்பேட்டையில் தாபா ஒன்றில் பணியாற்றும் நபருடன் ஒத்துப் போவதாக காவல்துறை வெளியிட்ட செல்போன் எண்ணிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரிடம் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து செல்கின்றனர்.