×

போரூர் - பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் புதிய வசதி

 

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடம் 4- ல் 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையின் இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கட்டடக்கலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ஆளில்லா மெட்ரோ இயக்கப்படுவதாலும் பூந்தமல்லி-போரூர் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில், முதல் கட்ட திட்டத்தில் இல்லாத ஆள் உயர நடைமேடை தடுப்பு கதவுகள் (half-height platform screen doors) அமைக்கப்பட்டுள்ளன. இவை 1500 மில்லி மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 4 .92 அடி என ஐந்து அடிக்குள்ளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு தடுப்புகள், இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போரூர் பூந்தமல்லி வழித்தடத்தில் உள்ள பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி,முல்லைத்தோட்டம், கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு ஆகிய 10 ரயில் நிலையங்களில் ஆள் உயர நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த அறை உயர நடைமேடை தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக, புதிய ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயண சீட்டுகள் வாங்குவதற்கும், ரயில் நிலையங்களுக்குள் நுழைவதற்கும் எளிதான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வழித்தடம், சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.