×

ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

 

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின்போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊட்டியில்  இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக  மே 13 முதல் 30 ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா  நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியர் டி.முருகவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது எனவும், மலைபகுதிகளில் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தும் என்பதால் மக்கள், யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் ஹெலிபேட் அமைந்துள்ளதால், பறவைகள், வன மற்றும் வீட்டு விலங்குகள் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என அச்சம் தெரிவித்துள்ளார். மேலும், பறவைகள் மோதினால் ஹெலிகாப்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு வானிலை சீற்றத்தால் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோர் பலியான சம்பவம் குறித்தும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரி வனப்பகுதியில் ஏறத்தாழ 250 கழுகுகள் மட்டுமே உள்ளன என்றும், ஹெலிகாப்டர் போக்குவரத்து, மனித நடமாட்டம், வாகன போக்குவரத்து, வேட்டையாடுதல் போன்றவற்றால் அவற்றின் வருகை 35.7 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே வரும் 13ம் தேதி தொடங்கவுள்ள ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின்போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்தனர். மேலும் அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட கூடாது என கருத்து தெரிவித்தனர். அதிக ஒலிகளால் விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.