×

வெயிலின் தாக்கம் எதிரொலி- காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை

 

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் விருதுநகரில் பட்டாசு தயாரிக்கும் ஆலையிலும்,  கேரள மாநிலம் திருச்சூரிலும் வெடிவிபத்தும் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்கும்  தொழிற்சாலைகள் கிடையாது. இருப்பினும் அரியாங்குப்பம், திருக்கனுார், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, சுத்துக்கேணி  கிராம பகுதிகளிலும் நாட்டு பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டுள்ளதா..? என போலீசார் சோதனை செய்தனர். திருக்கனூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர். 

திருக்கனூர், கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, செட்டிப்பட்டு பகுதிகளில் பட்டாசு செய்யும் இடங்களுக்கு சென்று பாதுகாப்புடன் பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால்  காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்கும் பணி செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர். விற்பனை செய்வோரின் விவரங்கள் மற்றும் முகவரியை பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  மேலும் பட்டாசு தயாரிப்போரிடம் உரிய உரிமம் இருக்கிறதா.? என்றும் ஆய்வு செய்தனர்.