×

ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார் பாலமுருகன்..!

 

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் திருநாளான இன்று மதுரையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் 12 சுற்றுகளாக விறுவிறுப்புடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை அடக்க களத்தில் 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தீவிரம் காட்டினர். இந்தப் போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அவனியாபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்த வீர விளையாட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையாங்குளம் பாலமுருகனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் இரண்டாம் பரிசான பைக்கையும், 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் மூன்றாம் பரிசையும் வென்றனர். சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்ட மந்தை முத்துக்கருப்பன் காளையின் உரிமையாளர் விருமாண்டி சகோதரர்களுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை அலங்காநல்லூரிலும், நாளை மறுதினம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.