ஜனநாயகன் படத்தை லீக் செய்த 9 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் இருந்த போது கடந்த ஏப்ரல் மாதம், சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியானது. படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகிய 9 பேரை கைது செய்தனர்.ஜாமீன் கோரி ஒன்பது பேரும் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறை கால நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்கள் தரப்பில், கைதாகி 42 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார்கள்; குற்றம்சாட்டபட்ட சிலர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது; ஒரு ஆர்வத்தில் தான் படத்தை பார்த்தனர்; சமூக வலைதளங்களில் பகிரவில்லை என வாதிடப்பட்டது. ஜாமீன் மனு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் ஆஜரான விஜயன் சுப்பிரமணியன், 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில், 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து உள்ளனர்; சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது; ஆர்வத்தில் திரைப்படத்தை பார்த்துவிட்டோம் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது; டெலிகிராம் சமூக வலைதள பக்கத்தில் முழு படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்கள்; முக்கிய நபரான உமா சங்கர் இன்னும் தலைமறைவாக உள்ளார்; கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என அட்சேபம் தெரிவித்து வாதிட்டார்.
காவல்துறை தரப்பில், ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பார்ப்பது என்பது குற்றம் தான்; அப்படி பார்த்தது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்கள்; வழக்கில் முக்கிய குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள உமாசங்கர் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்; அவரையும் கைது செய்தால் முக்கிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன; எனவே மனுதாரர்கள் எவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜனநாயகன் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வழக்கு விசாரணை ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சக்திவேல், 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.