×

"உழவர்களின் அறப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி" : முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
 

 


3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு , விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் பஞ்சாப், அரியானா, உ.பி மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். 

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று ஆற்றிய உரையில், “ நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை .  எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம்” என்றார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 



இந்நிலையில் தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்! உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.