வியட்நாமில் விசித்திர சம்பவம்: மோட்டார் சைக்கிள் இருக்கையிலேயே பெண் குழந்தை பிறப்பு!
வியட்நாமில் மருத்துவமனைக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண், மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் தாய் குவாங் மாகாணம், புலுவாங் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.25 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது கணவர், மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அவசரமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.ஆனால் மருத்துவமனையை அடைவதற்கு முன்னரே, அதன் வாசல் பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகரித்துள்ளது.இதனால் மோட்டார் சைக்கிளின் பின்புற இருக்கையிலேயே அந்தப் பெண் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சம்பவத்தை அவதானித்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று தாயையும் குழந்தையையும் மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிதான சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. மருத்துவ ஊழியர்கள் உடனடியாக வழங்கிய சிகிச்சையும் தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.