×

பாத்ரூம் பக்கெட்டில் மூழ்கிய சிசு... 13 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை பலியான சோகம்

 

திருப்பூரில் பனியன் நிறுவன ஊழியருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை பாத்ரூம் பக்கெட்டில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் பிச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (38). பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு ஒன்றரை வயதில் தன்சிக் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. சித்ரா திருப்பூரை அடுத்த எம்.எஸ். நகர், டி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தனது கணவரின் தங்கை பிரியா வீட்டிற்குத் தன் குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு உறவினர்களுடன் சித்ரா பேசிக்கொண்டிருந்த நிலையில், குழந்தை தன்சிக் மற்ற குழந்தைகளுடன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென வீட்டிற்குள் சென்றுள்ளது. சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணாததால் அதிர்ச்சியடைந்த தாய் சித்ராவும் உறவினர்களும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, வீட்டின் பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீருக்குள் குழந்தை தன்சிக் தலைகீழாக விழுந்து கிடப்பதைக் கண்டு அலறித் துடித்தனர். 

உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விளையாடச் சென்ற ஒன்றரை வயதுக் குழந்தை பக்கெட் தண்ணீரில் மூழ்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமார் சித்ரா தம்பதியினருக்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தன்சிக் பிறந்தது குறிப்பிடத்தக்கது.