×

உருவாகிறது ‘அய்யா பாமக’ கட்சி- தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு விண்ணப்பம்

 

‘அய்யா பாமக’ என்ற புதிய கட்சியை பதிவு செய்ய ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்*

பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையில் பாமகவின் மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், மாம்பழம் சின்னத்தை கேட்டு சிவில் நீதிமன்றத்தை ராமதாஸ் உடனடியாக நாட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அந்த மனுவை மூன்றே நாட்களில் விசாரித்து முடிவை எடுக்க வேண்டும் எனவும் சிவில் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் அய்யா பாசறை மக்கள் கட்சி ( அய்யா பாமக) என்ற புதிய கட்சியை பதிவு செய்ய ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். 


ராமதாஸ் ஆதரவாளரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய முதன்மை செயலாளராக இருந்த அன்பழகனின் மகன் முகிலன் தலைவராக கொண்ட இந்த கட்சியை பதிவு செய்ய ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இந்த கட்சியை பதிவு செய்வது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் அவற்றை ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதன்படி யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் கட்சி பதிவு நடைமுறை உடனடியாக மேற்கொள்ளப்படும். யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அதன் மீது முடிவெடுத்த பிறகு தான் கட்சியை பதிவு செய்வது தொடர்பான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்று தகவல் வெளியாகி உள்ளது