அசத்தும் TTDC..! 5 நாட்களில் 108 அம்மன் கோயில் சுற்றுலா.!
அம்மனின் அருளை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் தமிழகத்தில் உள்ள மிக பிரபலமான, முக்கியமான 108 அம்மன் கோவில்களுக்கு 5 நாட்கள் சென்று தரிசனம் செய்து விட்டு வருவதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் புதிய சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் என தமிழகத்தின் முக்கிய ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக அன்பர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளார்கள்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து இந்த ஆன்மிக பயணம் துவங்குகிறது. மீண்டும் வெள்ளி மற்றும் திங்கள் இரவ 9 மணிக்கு மீண்டும் சென்னையை வந்தடையும். ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். பஸ் புறப்பட்டது முதல், மீண்டும் ஆன்மிக பயணம் நிறைவடையும் வரை டூரிஸ்ட் கைடு ஒருவர் பயணிகளுடன் பயணம் செய்வார். இவர், ஒவ்வொரு கோவிலின் சிறப்புகள் பற்றியும் ஆன்மிக பயணிகளுக்கு எடுத்துரைப்பார்.
ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகள் தங்குவதற்கு தமிழ்நாடு ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். வைத்தீஸ்வரன்கோவில், தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் நான்கு இரவுகள் தங்க வைக்கப்படுவார்கள். இந்த ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பயணிகள் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு அடையாள சான்றை கண்டிப்பாக அளிக்க வேண்டும். குழந்தையாகளாக இருந்தால் ஆதார் கார்டு அல்லது பள்ளி அடையாள அட்டையை வழங்க வேண்டும். கைக்குழந்தையாக இருந்தால் ஆதார் கார்டு அல்லது பிறப்பு சான்றிதழ் அவசியம். அதோடு பயணிகள் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களையும் எடுத்து வர வேண்டும்.
5 நாட்கள் கொண்ட இந்த 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா பயணத்திற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.11,250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கும் இடம், பயண செலவு, உணவு, நுழைவுக் கட்டணம் என அனைத்தும் இந்த தொகையில் அடங்கும். இந்த ஆடி மாத அம்மன் கோவில்ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ttdconline.com என்ற தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக முன்பதிவு செய்யலாம். அல்லது 180042531111 என்ற எண்ணிற்கு டயல் செய்தும் முன்பதிவு செய்யலாம்.
பயணிகள் தங்களை பற்றிய விபரங்களை அளித்து முன்பதிவு செய்ய வேண்டும். இந்த பயணத்திற்கான முன்பதிவுகள் நிறைவடைந்த பிறகு முன்பதிவு செய்தவர்களின் மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரிக்கு சுற்றுலா குறித்த மேலும் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். சென்னை மட்டுமின்றி மற்ற ஊர்களை சேர்ந்த ஆன்மிக பயணிகளும் இந்த ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்க அனுமதி உண்டு. வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தாலும் இந்த ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்கலாம்.