×

பொது இடங்களில் குப்பை வீசினால் அபராதம்: அவிநாசி நகராட்சி எச்சரிக்கை..!!

 

அவிநாசி நகராட்சியில் உள்ள வீடுகளில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கிய குப்பைகளை அவிநாசி திடக்கழிவு மேலாண்மை வளம் மீட்பு பூங்காவில், நேரில் சென்று பார்வையிட்டு, நகராட்சி ஆணையர் பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவிநாசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்தன், சுகாதார மேற்பார்வையாளர்கள் கோமதி, சிவசங்கர், மாதையன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின்போது, அவிநாசி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்ற, பொதுமக்கள் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் பாலமுருகன் எச்சரிகை விடுத்துள்ளார்.

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வந்துள்னது. குப்பைகளை மூலத்திலேயே நான்கு வகையாக பிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ஈரக் கழிவுகளான சமையலறை கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், உலர் கழிவுகளான பிளாஸ்டிக் காகிதம், உலோகம், கண்ணாடி சுகாதாரக் கழிவுகளான டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், சிறப்பு பராமரிப்புக் கழிவுகளான பியூஸ் போன பல்புகள், டியூப் லைட்டுகள், பேட்டரிகள், காலாவதியான மருந்துகள் போன்றவைகள் தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் குப்பைகளை சேகரிக்கப்படுவது முதல், முறையாக அழிக்கப்படுவது வரை. ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும்.

இந்த புதிய விதிகளின் அடிப்படையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் குப்பைகளை தீவிரமாக சேகரித்து வருகின்றன.இதில், நகராட்சி ஆணையர் பாலமுருகன் கூறியதாவது: அவிநாசி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026.ஐ சிறப்பாக செயல்படுத்தும் வகையில், குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்து சேகரிக்கும் புதிய நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விதிகளின் படி வீடுகள் மற்றும் வணிகப்பகுதிகள், பள்ளிகள். கல்லூரிகள், தொழிற்சாலைகள் சந்தை பகுதிகள் தெருவோர் வியாபாரிகள் என அனைவரும் நகராட்சியின் குப்பை வாகனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார குப்பை, சிறப்பு பராமரிப்பு குப்பை (அபாயகரமானகுப்பை) குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து நகராட்சி குப்பை வாகனங்களில் கொடுக்க வேண்டும்.

குப்பைகளை பிரித்துக்கொடுக்காத வீடுகள் மற்றும் வணிகப்பகுதிகளிலிருந்து குப்பைகள் பெறப்படமாட்டாது. இந்த விதிகளை மீறுவோருக்கு, நகராட்சி மூலமாக கடும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல், கழிவுநீர் கால்வாய்கள், பொது இடங்கள், தெருக்கள். அனைத்து மத வழிபாட்டு தலங்கள் அமைத்துள்ள பகுதிகள் ஆறுகள், நீர் நிலை பகுதிகள் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது.

பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் சமுதாய கழிப்பிடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளில் பொதுமக்கள் குப்பைகளை நான்கு வகையாக சரியாக தரம் பிரித்துக் கொடுத்தால், அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதோடு பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படும்.

மேலும், குப்பைகளை வகைகளாக பிரித்து தருவதை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதியின் தூய்மை தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள். எனவே, குப்பைகளை ஒன்றாக கலக்காமல், நான்கு வகைகளாக பிரித்து வழங்கி, அவிநாசி நகராட்சியை, தூய்மையான நகராட்சியாக மாற்ற, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.