பறவை காய்ச்சல் பரவல்: பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்..!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பறவைக் காய்ச்சல் எனும் (AH5N1) இன்ஃபுளுயன்சா என்பது பறவைகளுக்கு வரும் நோய். இது, பெரும்பாலும் காட்டில் வசிக்கும் பறவைகள் மத்தியில் பரவக்கூடிய ஒரு வைரஸ். ஆனாலும், வளர்ப்புக் கோழிகள், பிற பறவை மற்றும் விலங்குகளையும் இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கும் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
காகம், கோழி உள்ளிட்ட ஏதேனும் பறவைகள் இறந்து கிடந்தால், அவற்றை வெறும் கைகளால் தொடக்கூடாது. கையுறைகள் அணிந்து அவற்றை கையாள வேண்டும். அவ்வாறு இறந்த பறவைகளை எரிக்க வேண்டும் அல்லது 8 அடி ஆழமுள்ள குழியில் சுண்ணாம்பு தூவி புதைக்க வேண்டும்.
பொதுமக்கள் பறவை இறைச்சிகளை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும்.அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. கோழிகள் வளர்க்கப்படும் வீடுகள் அல்லது கோழிப் பண்ணைகளுக்குள் காட்டுப் பறவைகள், விலங்குகள் நுழைவதை தடுக்க வேண்டும்.
கோழிப்பண்ணை கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கோழிப்பண்ணை தொழிலாளர்கள் அடிக்கடி வெளியே சென்று வருவதால், பண்ணைகளின் நுழைவாயிலில் கை, கால்களை தூய்மைப்படுத்தி கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தும்மல் அல்லது இருமும் போது பிறர் மீது சுவாசத்துளி படாத வண்ணம், மூக்கு மற்றும் வாயை மூடி கொள்ள வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கண்கள், மூக்கு அல்லது வாயை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பறவை காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், தசை வலி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனை இருந்தால் பொதுமக்கள் சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்த்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை உடனடியாக அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நபர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அதிகமாக நீர் ஆகாரங்களை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.