பொதுமக்கள் கவனத்திற்கு.! - இனி 10 நாட்களுக்குள் வாங்கிய சான்று இருந்தால் மட்டுமே பதிவு..!
தமிழ்நாட்டில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாகக் கூறி, பொய் புகார் கொடுத்தோ அல்லது நகல் ஆவணத்தை வைத்தோ சொத்துப் பதிவுகளை முறைகேடாக செய்து வந்தனர். போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில், இனி எந்தவொரு சொத்தை விற்பனை செய்ய, தானமாக வழங்க பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஒருவர் செல்லும்போது, அதன் மூலப்பத்திரம் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது.
தொடர்ந்து, பத்திரப் பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான ‘அசல் ஆவணம்’ தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மசோதாவைப் பரிசீலித்த ஆளுநர் ஆர்.என் ரவி, அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில், தமிழக அரசின் பத்திரப் பதிவு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்தின் கீழ், பத்திர பதிவுக்காக, சார் - பதிவாளரிடம் ஒருவர் ஆவணம் தாக்கல் செய்யும்போது, அதற்கு 10 நாட்களுக்கு முன்பாக பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ், அந்த சொத்துக்கான மூலப்பத்திரமான அசல் ஆவணம் போன்றவற்றை தாக்கல் செய்ய வேண்டும். அசல் ஆவணம் இல்லாவிட்டால் அந்த பத்திரம் பதிவு செய்யப்படாது.
அதேபோல, அந்த சொத்து அடமானம் வைக்கப்பட்டிருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று, அதனையும் தாக்கல் செய்ய வேண்டும். மூதாதையர் சொத்தாக இருந்தால் அதற்கு மூலப்பத்திரம் இல்லாத நிலையில், வருவாய்த் துறையில் வழங்கப்பட்ட பட்டா சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே பத்திரப் பதிவு மேற்கொள்ளப்படும்.
ஒருவேளை அசல் ஆவணம் தொலைந்து போய்விட்டால், உள்ளூர் நாளிதழில் வெளியிட்ட விளம்பரம், காவல்துறை வழங்கிய கண்டறிய முடியவில்லை என்ற சான்றிதழை தாக்கல் செய்தால் மட்டுமே பத்திரப் பதிவு மேற்கொள்ளப்படும். இந்த சட்ட மசோதா மூலம் பத்திரம் பதிவு மோசடிகள் தடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.