பொதுமக்கள் கவனத்திற்கு..! புதிய ரேஷன் கார்டு பெற இனி புது ரூல்ஸ்..!
ரேஷன் அட்டை வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கவும், திருத்தங்களைச் செய்யவும் அரசு அனுமதிக்கிறது.
ரேஷன் கார்டைப் பெற தனி சமையல் அறையுடன் வசிப்பவர்கள் 'ஆதார்' எண்ணுடன் உணவு வழங்கல் துறையின் பொது விநியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தின் மூலம், உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செய்யலாம்
கார்டுதாரர்கள் தேவைக்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதை அதிகாரிகள் பரிசீலித்து ஒப்புதல் தருவர். இதுதான் நடைமுறையாக இருந்தது. இதற்கிடையே மகளிர் உரிமைத் தொகையைப் பெறுவதற்கும் ரேஷன் அட்டை அவசியம் என்பதால், புதிய ரேஷன் கார்டுக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உணவுத் துறை, உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கடைபிடிக்க முடிவு செய்துள்ளது.
மேற்கண்ட ஒவ்வொரு சேவைக்கும் ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் விண்ணப்பிக்க முடியும். ஆவணங்களை பதிவிறக்கவும் முடியும். அதன்படி 'ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல் உட்பட நான்கு சேவைகளுக்கு, இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என, உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "ரேஷன் கார்டில் மாற்றங்களை மேற்கொள்ள, உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேவைகளை முறைப்படுத்த, ஆண்டுக்கு இருமுறை விண்ணப்பிக்க அனுமதி, ஆவணம் பதிவிறக்க அனுமதி அளிக்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.