×

பயணிகள் கவனத்திற்கு..!  ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப் போகுது!!

 

இந்தியாவின் எந்த ஒரு பொது போக்குவரத்தையும் விட மக்கள் அதிகம் நம்பிக்கையோடு பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்து ரயில்கள் தான்.ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு என்பது இரண்டு விதங்களில் இருக்கிறது.

ரயில் புறப்படும் 60 நாட்களுக்கு முன்னரே பொது டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அடுத்ததாக தட்கல் டிக்கெட் பதிவு என்பது ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் தொடங்கும் . இந்த ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏஜென்ட்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது, இதன் காரணமாக பொதுமக்களால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளையும் ஏஜெண்டுகள் புக் செய்து விடுகிறார்கள் இதனை அடுத்து அதிக விலைக்கு மக்களுக்கு அவற்றை விற்பனை செய்கிறார்கள்.

இதனை அடுத்து தான் ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது . முதல் கட்டமாக தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிப்பு வெளியிட்டது. எனவே ஆன்லைன் வாயிலாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது அந்த நபர் தன்னுடைய ஆதார் எண்ணை irctc கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் சமயத்தில் ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி உள்ளீடு செய்தால் மட்டுமே தட்கல் டிக்கெட்டையும் முன்பதிவு செய்ய முடியும் என்ற முறை கொண்டு வரப்பட்டது.

இதனை அடுத்து தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் குறைந்தது. இதனால் சாமானிய மக்கள் பலரும் தங்களுக்கு ரயில் டிக்கெட் கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனை அடுத்து ரயில்வே நிர்வாகம் அனைத்து வகையான டிக்கெட் முன்பதிவுகளுக்கும் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்ப்பு முடித்திருப்பது கட்டாயம் என்று அறிவிப்பை வெளியிட்டது.

ஆன்லைன் மற்றும் இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடிய நபர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கக்கூடிய முதல் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் பதிவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது .தற்போது 60 நாட்களுக்கு முன்னர் ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் தொடங்கும் முதல் நாளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆதார் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி பயனர்களால் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும். இதனை படிப்படியாக இந்திய ரயில்வே விரிவாக்கம் செய்ய முன் வந்திருக்கிறது . இதன்படி ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவில் முதல் நாள் முழுவதுமே ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது நடைமுறைக்கு வர இருக்கிறது.

அதாவது டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும். ரயில் கவுண்ட்டர்களில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் வழக்கம் போல சென்று டிக்கெட்டை முன் பதிவு செய்யலாம். ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பித்தாலே போதும். ஆனால் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும்.