பயணிகள் கவனத்திற்கு..! விரைவு ரயில் சேவையில் மாற்றம்..!
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் இதற்கு பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் 3 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூபாய் 842 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாட்டு முனையங்கள், விசாலமான காத்திருப்பு அரங்குகள், லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகை மற்றும் பார்சல் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதனால், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 9 விரைவு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மங்களூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சேலம்–சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் தாம்பரம் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் உழவன், அனந்தபுரி, மங்களூர் மற்றும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் தாம்பரம் நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், திருச்சிராப்பள்ளி–சென்னை எழும்பூர் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் மாம்பலம் நிலையத்துடன் சேவை நிறுத்தப்படும்.
மேலும், அகமதாபாத்– திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி–அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதால், அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.