பக்தர்கள் கவனத்திற்கு..! மருதமலை முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை..!
மருதமலைக்குத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைப்பாதை மற்றும் படிக்கட்டுகள் வழியாகக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் முன்பாக நின்று செல்ஃபி எடுப்பதையும், வீடியோ எடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். இது சன்னதிக்கு உள்ளே தரிசனம் செய்ய வரும் மற்ற பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் இடங்களில் செல்போன் பயன்பாடு முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
- ராஜகோபுரம் நுழைவாயில் முதல் ஆதிமூலவர் சன்னதி வரை.
- சுப்பிரமணிய சுவாமி சன்னதி மற்றும் பாம்பாட்டி சித்தர் சன்னதி.
- கோவில் உட்பிரகாரம் மற்றும் ஒட்டுமொத்த கோவில் வளாகம்.
நிர்வாகத்தின் வேண்டுகோள்
பக்தர்கள் அனைவரும் அமைதியான மற்றும் தெய்வீகமான முறையில் சாமி தரிசனம் செய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கக் கோவில் நுழைவு வாயில் அருகே லாக்கர் (Locker) வசதிகள் செய்யப்பட்டுள்ளன. "ஆன்மீகப் புனிதத்தைப் பேண பக்தர்கள் அனைவரும் இந்த புதிய நடைமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும்" எனக் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.