×

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு..! ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு புதிய ரூல்ஸ்..!

 

ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருமலை கோவில் நிர்வாகம் தரிசன நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

இது குறித்து அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறைகள் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டில் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவதால், கூட்டநெரிசலை குறைக்கவும், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை குறைக்கவும் தேவஸ்தானம் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான் தற்போது புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து பணியுங்கள்.

தற்போது வரை திருப்பதி கோவிலில் ரூபாய் 300 தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களும், குறிப்பிட்ட நேரத்திற்கான சர்வ தரிசன டிக்கெட்கள் பெற்ற பக்தர்களும் அந்த நேரத்திற்கு செல்லாமல், அதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வந்தனர். இதனால் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் என பலரும் சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது வெளியானது. இந்த சிக்கல்களை சரி செய்யும் வகையில் தேவஸ்தானம் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வரிசையில் நிற்க வேண்டும், மற்ற நேரத்தில் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தரிசன நேரத்திற்கு முன்கூட்டியே வந்து வரிசையில் காத்திருக்க வேண்டாம். அப்படி முன்கூட்டியே வருவதால் ஏற்கனவே வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையற்ற அசோகரியங்களும், சிரமங்களும் ஏற்படுகிறது. இதனால் அவர்களும் அவர்களுடைய தரிசன நேரத்தில் ஏழுமலையானை பார்க்க முடிவதில்லை, அதன் பின்பு வருபவர்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள சரியான நேரத்திற்கு வந்தால் போதும், அப்போது தான் லைனில் அனுமதிக்கப்படுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிறப்பான மற்றும் அமைதியான தரிசனத்தை உறுதி செய்வதற்காகவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை திருமலையில் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விதிகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்தாலும் பக்தர்கள் வரிசையில் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் திவ்ய தரிசனம் டோக்கன்கள் வாங்குவோர்களின் ஆதார் எண்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்தர் இலவச தரிசனத்தில் டோக்கன் பெற்றால் அடுத்த 30 நாட்களுக்கு அவரால் மீண்டும் அதே ஆதார் எண்ணை பயன்படுத்தி தரிசனத்திற்கு புக் செய்ய முடியாது என்ற விதிகளை கடுமையாக்கி உள்ளது தேவஸ்தானம்.

பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான தரிசனம் கிடைப்பதை உறுதி செய்யும் தான் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள. எனவே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் இந்த புதிய விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த புதிய அறிவிப்பால் பக்தர்கள் நீங்க நேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.