×

மக்களே கவனம்..! இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

 

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில், 16, 17, 18 ஆகிய 3 நாள்களுக்கும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதற்கிடையே மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக, நேற்று (செவ்வாய்கிழமை) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று (22-ம் தேதி) பிற்பகலில் ஆந்திர கடற்கரைகளுக்கு அப்பால் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு அது மேற்கு வடமேற்காக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. 11 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தல் காரணமாக ராமநாதபுரம் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானதால் மறு அறிவிப்பு வரும் வரை மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.