ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்- அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் தொமுச சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நோயாளியை அழைத்துச் செல்ல முயன்ற 108 ஆம்புலன்ஸ் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த 18ம் தேதி வேலூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது, 108 ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியே வந்துள்ளது. அப்போது அதிமுக கூட்டங்களில் நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆம்பூலன்ஸ் வருவதாக குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனம் குறுக்கிடுவதாக எடப்பாடி பழனிசாமி எச்சரித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் தொமுச சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தனர். இதனிடையே துறையூரில் அதிமுக கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துறையூர் நகரச் செயலாளர், நகரமன்ற உறுப்பினர், வடக்கு ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 14 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது துறையூர் போலீஸ்.