×

தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்...!

 

ஸ்ரீவைகுண்டம் மேலப்பரம்பைச் சேர்ந்த பாலமுருகன், தவெகவின் ஒன்றிய செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் சேர்ந்து பத்மநாபமங்கலத்தில் உள்ள கல் குவாரிக்கு நேரில் சென்று, குவாரி உரிமையாளரிடம் சட்டவிரோதமாகப் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் குவாரி உரிமையாளர் மாமூல் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர், குவாரி அலுவலகத்தில் இருந்த கணினி, தொலைக்காட்சிப் பெட்டி (TV) மற்றும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றைத் தகராறில் ஈடுபட்டு அடித்து நொறுக்கியுள்ளனர். இது குறித்துக் குவாரி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சியில் புதியதாகப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டு, தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளிடம் கட்டப்பஞ்சாயத்து மற்றும் பணம் கேட்டு மிரட்டலில் ஈடுபட்ட தவெக நிர்வாகியின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாகத் தவெக நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் மற்றும் நில அபகரிப்புப் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், இந்தச் சம்பவமும் கட்சித் தலைமைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.