×

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே.. நேரில் போனீங்களா..? கே.ஏ. செங்கோட்டையன் கேள்வி..!

 

த.வெ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் வாதங்களுக்கு மாறாக, அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை வாக்கு வங்கியில் பலவீனமாகவே இருப்பதாக அவர் விமர்சித்தார்.

 பாரதப் பிரதமர் வரும்போது கூட அ.தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் பின்னால் இடம்பெறாதது ஏன்..?சொந்த முகத்திற்காக மக்கள் அவருக்கு ஓட்டுப் போடும் அளவிற்கு அவர் செல்வாக்கு பெற்றவரா என்றும் காரசாரமாகக் கேட்டார்.

மக்கள் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த மாற்றம் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வராது என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் நலனுக்காகப் பணியாற்றக் களமிறங்கியுள்ள புதிய சக்திகளுக்கு ஆண்டுக்கு 500 கோடி வருவாய் போன்ற கணக்குகள் தேவையில்லை; மக்களின் விருப்பமே போதுமானது என்றார். அ.தி.மு.க மற்றும் தி.மு.க தொண்டர்களின் வீடுகளிலேயே கூட, அவர்களின் மனைவி, மகன், மகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கே தங்களது ஆதரவைத் தெரிவிக்கின்றனர் என்பதைத் தனது சர்வே முடிவுகள் காட்டுவதாக அவர் கூறினார். தங்கள் தரப்பு 40 சதவீத ஆதரவுடன் வலுவாக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டபோது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஒரு அமைச்சராவது அங்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? என வினவிய அவர், எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரியும் என்றும், அவர் 'தவழ்ந்து வந்து' பதவி ஏற்றதை மக்கள் மறக்கவில்லை என்றும் விமர்சித்தார். இறுதியாகக் கூட்டணி குறித்த முடிவுகளைத் தலைவரே எடுப்பார் என்றும், மற்ற கட்சிகளைப் போலத் தான்தோன்றித்தனமாகத் தாங்கள் பேச முடியாது என்றும், தலைமை காட்டும் வழியிலேயே தங்கள் பயணம் தொடரும் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.