☰
×

ம.பி-யில் 3 இடங்களில் அடுத்தடுத்து தீ விபத்து - கைக்குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்த சோகம்..!

 

மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள சப்பாரா நகரின் மகாவீர் வார்டில் ஒரு ஜெயின் கோயில் அமைந்திருக்கிறது. அதன் அருகே பொற்கொல்லரான குந்தன் லால் என்பவரின் மூன்றடுக்கு மாடி வீடு அமைந்திருக்கிறது.

இன்று அதிகாலை 4:30 மணியளவில் அந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிற்குள் 10 பேர் இருந்த நிலையில், 6 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பெண்களும், ஒரு சிறுவனும் அடங்குவர்.

தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த வீட்டிற்கு காவல் துணைப் பிரிவு அதிகாரி அபூர்வ பாலவி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளார்.

தீ விபத்து சம்பவம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த அவர், இந்த தீ விபத்தில் குந்தன் லால் சோனி (75), அவரது மனைவி ராஜ்குமாரி சோனி (65), ரிது சோனி (42), ஸ்மிருதி சோனி (40), சூர்யா சோனி (45) மற்றும் ஆதித்யா சோனி (16) ஆகியோர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கட்னியிலும் இதேபோன்ற ஒரு தீ விபத்து சம்பவம் நடந்தேறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் பர்ஹி நகரில் அமைந்திருக்கும் மூன்று மாடி கட்டடத்தில் உள்ள ஒரு மண்பாண்ட கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பற்றியெரிந்த நெருப்பானது விறுவிறுவென கட்டடம் முழுக்க சூழ்ந்ததாகவும், இதில் கடையின் உரிமையாளரான பூரன் அகர்வால் (77), அவரது மனைவி சந்திரகலா (74), மருமகள் பூனம், பேத்திகள் ஆர்யா (14), அன்வி (6) மற்றும் 2 மாதக் குழந்தை என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மருமகள் பூனமின் கைகளிலேயே 2 மாத குழந்தை இறந்த நிலையில் இருந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்ததாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல, தீபாவளியன்று இரவு 9 மணியளவில் உஜ்ஜைன் மாவட்டத்தின் நாக்ஜிரி பகுதியில், இரண்டடுக்கு மாடி கட்டடத்தின் கீழ் அமைந்துள்ள 2 கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வீட்டின் மேல்தளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்த வியாபாரிகளும், உள்ளூர்வாசிகளும், காவல்துறையுடன் இணைந்து பத்திரமாக மீட்டனர். எனினும், இச்சம்பவத்தில் 107 வயதான முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தீ விபத்து குறித்து உயிர் பிழைத்த கமலேஷ் கூறுகையில், “கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுக்க தீப்பொறிகளும், புகையும் சூழந்தன. கீழே இருந்த கடைகளில் மின்னணுப் பொருட்களும், ஆயில் பெயின்ட்டுகளும், எளிதில் தீப்பற்றக்கூடிய பல்வேறு பொருட்களும் இருந்தன. தீபாவளி பூஜை முடித்துவிட்டு, பட்டாசு வெடிப்பதற்காக கீழே அழைத்துவந்தபோது புகை சூழ்ந்து கொண்டது” என தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் இருவர் காயமடைந்ததாகவும், கவலைக்கிடமான நிலையில் முதியவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக நகர காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதா குப்தா தெரிவித்தார்.