×

இலங்கைக்கு உதவ தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு தீர்மானம்!!

 

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்,  உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  அரிசி,  பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுவதுடன் , இலங்கை தமிழர்கள் பலர் ஆபத்தான முறையில் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை புரிவதையும் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.  மனிதாபிமான அடிப்படையில் அரிசி , பருப்பு உள்ளிட்ட பொருட்களையும்,  உயிர் காக்கும் மருந்துகளையும்  அனுப்ப தமிழ்நாடு அரசு தயாராக உள்ள நிலையில்,  அதற்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும்.  இது குறித்து ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.  இருப்பினும்  மத்திய அரசிடமிருந்து  எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும்,  உயிர்காக்கும் மருந்துகளையும் தமிழகத்திலிருந்து அனுப்பத் தேவையான ஏற்பாடுகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.  முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முன்மொழிவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.