ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல்..?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஐ.சி.சி. தொடர்களில் ஆசிய அணிகள் சிறப்பாக செயல்படும் பொருட்டு இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இம்முறை இந்த தொடர் டி20 வடிவில் நடைபெற உள்ளது. இருப்பினும் இதற்கான அட்டவணை அல்லது எந்தெந்த மைதானங்களில் போட்டி நடைபெறும் என்ற எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தொடருக்கான ஆலோசனை கூட்டம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் வரும் 24-ம் தேதி நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி அறிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியா-வங்காளதேசம் இடையே இடையேயான உறவில் சமீபகாலமாக கசப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), வங்காளதேசம் செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஆலோசனை கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மொஷின் நக்வியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மொஷின் நக்வியிடம் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.
இலங்கை, ஓமன் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களும் இந்தியாவை ஆதரித்துள்ளன. அதிகரித்து வரும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், டாக்காவில் கூட்டத்தை நடத்துவதில் மொஷின் நக்வி பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிய கோப்பை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.