பதவியேற்றவுடன் கடமை முடிந்தது என ரீல்ஸ் போட கிளம்பிவிட்டார்கள்..! - முதலமைச்சர் விஜய்யை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே நேற்று நள்ளிரவு 17 வயது பள்ளி மாணவனை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற விளக்குத்தூண் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலின் கார் பார்க்கிங் அருகே பள்ளி மாணவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் ஒருவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தற்போதைய தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று.
புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிகள் எல்லாம் முதல் 6 மாதங்களில் தப்பித்தவறிக் கூட தங்கள் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமுடன் செயல்படுவார்கள். ஆனால், திரு.
விஜய் அவர்களும் அவரது அமைச்சர்களும் பதவியேற்றவுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என மீண்டும் ரீல்ஸ் போடக் கிளம்பிவிட்டார்கள் போல. அதனால் தான் திமுக ஆட்சிக்கு நிகராக தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
இனியாவது முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சுதாரித்துக் கொண்டு சீரழிந்த சட்டம் ஒழுங்கை சமன் செய்ய வேண்டும்! சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் பெற்றுத் தர வேண்டும்!