☰
×

ஒரு பெண்ணாக, ஒரு தாயாக மிகுந்த வேதனை அடைகிறேன் - தவெக மீது மேயர் பிரியா குற்றச்சாட்டு..!

 

தன்னை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தவறாகச் சித்தரித்து தவெகவினர் இணையத்தில் காணொளி பரப்புவதாகச் சென்னை மேயர் பிரியா குற்றம் சாட்டியுள்ளார். தவெக தலைமையின் தொடர்பில் உள்ள கும்பல் தொடர்ச்சியாகத் தன் மீது இணையத் தாக்குதல் நடத்துவதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறும் முதலமைச்சர் விஜய் இது குறித்து மௌனம் காப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.

சென்னை மேயர் பிரியா மீது சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக ஆபாச தாக்குதல் நடந்து வருகிறது. தவெக ஆட்சி அமைத்த பின் மேயர் பிரியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் சோசியல் மீடியாவில் அக்கட்சியினர் நக்கல் செய்து வருவது தொடர் கதையாகி இருக்கிறது. அதிலும் அவர் ஹேர் கட் செய்த போது நடந்த சோசியல் மீடியா தாக்குதல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தார். தற்போது மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. முகம் சுழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோ தவெகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மேயர் பிரியா, இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக் குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசி வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐ செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு குறித்து தவறாக பேசினாலே நடவடிக்கை எடுப்போம் என்று தவெக கூறி வருகிறது. இதனால் மேயர் பிரியா குறித்து முகம் சுழிக்கும் வகையில் ஏஐ வீடியோ உருவாக்கி வெளியிட்ட நபர்களை காவல்துறை கைது செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தன்னை குறி வைத்து Abuse செய்து வரும் கும்பல் தவெக தலைமையின் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.