போலீஸ் தாக்கியதால்தான் என் அண்ணன் இறந்தான் - உயிரிழந்த அருணாச்சலத்தின் தம்பி குற்றச்சாட்டு..!
தூத்துக்குடி அமுதநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் அருணாச்சலம்(24). இவர் 3-ஆம் மைல் பகுதி அருகே உள்ள ஒரு அரசு மதுபானக்கடையுடன் அமைந்த மதுபான கூடத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடை மூடிய பிறகு சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி காலை, அரசு மதுபானக்கடை மூடியிருந்த நிலையில், அருணாச்சலம் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் என நான்கு பேர், அவரை 120 மதுபாட்டில்களுடன் கைது செய்து, தென்பாகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜர்படுத்தி உடல் தகுதி சான்றும் பெற்றுள்ளனர். பின்னர், அவரை நீதிமன்றம் அழைத்து செல்வதற்காக தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் வைக்கப்படும் அறையில், மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்து வைத்திருந்தனர்.
அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, குடும்பத்தினர் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தை காவல் துறையினர் சொந்த ஜாமினில் விடுவித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அருணாச்சலத்திற்கு பின்தலையில் காயம் காரணமாக ரத்த கசிவு அதிகமாக இருந்ததால், கடந்த 21 ஆம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு, அருணாச்சலத்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனது அண்ணன் அருணாச்சலத்திற்கு எந்த நோயும் கிடையாது என்று அவருடைய தம்பி சுடலைமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "எனது அண்ணன் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவருக்கு இதுவரை எந்த நோயும் கிடையாது. காவல் துறையினர் தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
காவல் நிலையத்தில் வந்திருந்த எனது தாயார் வெளியே சென்ற நேரத்தில், காவல்துறையினரே எனது அண்ணனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விட்டு எங்களுக்கு தகவல் அளித்தனர். சொந்த ஜாமினில் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட எனது அண்ணனுக்கு பின் தலையில் இருந்த காயம் காரணமாக இரத்தக்கசிவு அதிகமாக ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நன்றாக இருந்த எனது அண்ணன் திடீரென்று இன்று காலை உடல் நிலை மிகவும் மோசமாகி இறந்து விட்டார். இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம். எனது அண்ணன் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். நீதித்துறை நடுவர் முன்னிலையில் இந்த பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இதில், தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.