×

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு

 

கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல பகுதிகளில் இயங்கி வரும் முன்னணி நபர்களை பெருமை படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசு 1957ம் ஆண்டு முதல் செவாலியே விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புகழ்பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு இந்த ஆண்டு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது பிரான்ஸ் அரசு. 60 ஆண்டுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் தோட்டா தரணி. நாயகன் படத்திற்காக இவர் அமைத்த மும்பை தாராவி செட் இன்று வரை பிரபலமாக உள்ளது.ஏராளமான இடங்களை தனது கலை இயக்கம் மூலம் தத்ரூபமாக உருவாக்கி பிரமிக்க வைத்தவர். நாயகன் மற்றும் இந்தியன் படங்களுக்காக கலை இயக்கத்திற்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். மத்திய அரசின் பத்மஶ்ரீ, தமிழ்நாடு ஸ்டேட் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 1978ல் தெலுங்கில் அறிமுகமானவர் தமிழில் 1981ம் ஆண்டு கமல் நடித்த ராஜபார்வை படத்தில் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கலை இயக்கம் பெரிதும் பேசப்பட்டது.  

சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் வரும் 13ம் தேதி ‘லா மேசான்’ என்ற நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் திறந்து வைக்கிறார். அந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியே விருது வழங்கப்பட இருக்கிறது. செவாலியர் விருதை இதுவரை 1987ம் ஆண்டு இயக்குனர் சத்யஜித் ரே,1997ம் ஆண்டு சிவாஜி கணேசன், 2007ம் ஆண்டு அமிதாப் பச்சன்,  2014ம் ஆண்டு ஷாருக்கான் மற்றும் 2016ம் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.