×

எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்யத் தடை..! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

 

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் ஊடகவியலாளர் செந்தில் வேல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி.சூர்யா மீது செந்தில் வேல் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பாட்டில், கத்தி மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த எஸ்.ஜி.சூர்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 10-ஆம் தேதி எஸ்.ஜி.சூர்யா, பாரதி கண்ணன், விக்னேஷ் மற்றும் பத்மநாபன் ஆகிய நான்கு பாஜகவினர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்களைக் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்பதால், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

எஸ்.ஜி.சூர்யா தாக்கல் செய்த மனுவில், தங்களைத் தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசியல் உள்நோக்கத்துடன் தங்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும், காவல்துறையின் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ் நீதிபதி ராஜசேகர் முன்பு முறையிட்டார். விசாரணையின் போது, அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ஒரு பெண்ணிடமிருந்து புகாரைப் பெற்று, அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர், இது குறித்துப் பதிலளிக்கக் காவல்துறைக்கு அவகாசம் வழங்கினார். மேலும், விசாரணையைப் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்யக் கூடாது எனத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.