×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் ஜாமீன் வழங்கி உத்தரவு..!

 

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால், அவரது வீட்டிற்கு அருகே உணவு டெலிவரி செய்வது போல வந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில், தனது தாய் இறந்து விட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தனக்கு இடைக்காலமாக ஜாமீன் வழங்கக் கோரி ரவுடி பொன்னை பாலு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே மகன் என்ற அடிப்படையில் உயிரிழந்த தாய்க்கு பொன்னை பாலு மட்டுமே இறுதி சடங்கு மேற்கொள்ள வேண்டுமென்பதால் அவருக்கு இடைக் காலமாக ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.